சென்னை: யுனிசெஃப் வெளியிட்டுள்ள காணொலியில் கரோனா தற்காப்பு நடிவடிக்கைகள் குறித்து நடிகை திரிஷா விளக்கியுள்ளார்.
கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு பல்வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. திரை பிரபலங்களும் இந்தக் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளையும், விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றனர்.
இதையடுத்து குழந்தைகள் நலனுக்காக இயங்கிவரும் யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலனுக்கான நிதி மையம்) அமைப்பின் இந்தியத் தூதராக இருக்கும் நடிகை திரிஷா, கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை விளக்கியுள்ளார்.
ஒரு நிமிடம் 10 விநாடிகள் ஓடும் இந்தக் காணொலியில், இருமல், தும்மல் வந்தால் என்ன செய்ய வேண்டும், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் மற்றவர்களை விட்டு விலகி உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவ மையத்துக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கரோனா அறிகுறி இருப்பவர்கள் முகமூடி அல்லது துணியால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற தமிழ்நாடு அரசின் 24 மணி நேர சேவை எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
திரைப்படங்களில் நடிப்பது தவிர பீட்டா, யுனிசெஃப் போன்ற சமூக அமைப்புகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவருகிறார் திரிஷா. தற்போது உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ள கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது பற்றி விவரித்துள்ளார்.
திரிஷா நடிப்பில் பரமபத விளையாட்டு, கர்ஜனை என இருபடங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. அத்துடன், ராங்கி, மலையாளத்தில் உருவாகும் ராம், மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துவருகிறார்.