பயோ பிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் திரையுலகில் அதிக வரவேற்பை பெற்றுவருகின்றன. அந்த வகையில், நடிகை சாவித்ரி, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்டிஆர், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஏ.எல்.விஜய் 'தலைவி' என்ற பெயரில் இயக்கி வருகிறார். அதேபோல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'குயின்' என்ற இணையத் தொடராக கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
இதனிடையே மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை எடுக்க பல முன்னணி இயக்குநர்களும் தயாராகிவருகின்றனர். ஏற்கனவே கருணாநிதி கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை நிச்சயம் எடுப்பேன் என அவரது பேரனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'தனது தாத்தாவின் வரலாற்றுப்படத்தை எடுக்க பலர் தங்களைத் தொடர்புகொண்டனர். அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்து நான் முடிவு செய்ய முடியாது. எனது தந்தையும், அந்தப்படத்தை இயக்கப் போகும் இயக்குநருமே அதனை தீர்மானிப்பார்கள். அந்தப்படத்தில் நான் நடிக்க மாட்டேன்' என தெரிவித்திருக்கிறார்.