ரஜினி மீது தி.வி.க. சார்பில் மேலும் 2 வழக்குகள்! - பெரியார் குறித்து ரஜினி அவதூறு பேச்சு
பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், காலணி மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.
பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை கோரி கோவை காட்டூர் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் நேருதாஸ் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேருதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேபோல், ரஜினிகாந்த் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தொடர்ந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.