இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து திரைப்படம், சீரியல்களல் என அனைத்து ஷூட்டிங்குகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட கடந்த இரண்டு வார காலமாக சீரியல்கள், கேம் ஷோக்கள் உள்ளிட்ட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் சின்னத்திரை நடிகர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்.
இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவி வர்மா நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சுமார் 1800க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சுமார் 300 முதல் 400 பேர் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள். 1000க்கும் மேற்பட்டோர் அன்றாட படப்பிடிப்பில் கலந்துகொண்டால் மட்டுமே பணம் என்ற அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவினால் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு என்பதால் முன்கூட்டியே கூடுதல் நேரம் வேலை செய்து ஒருவாரத்திற்கு தேவையான எபிசோடுகளை முடித்தோம். மீண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் படப்பிடிப்புக்கு செல்லலாம் என காத்திருந்தோம். ஆனால் அதற்குள் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சின்னத்திரை நடிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் இவர்களின் பொருளாதார நிலை உள்ளது. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வாடும் இவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது.
இந்நிலையில், சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு சென்ற நடிகர் கார்த்திகேயனிடம் சின்னத்திரை கலைஞர்களின் கஷ்டங்களை கூறினோம். சின்னத்திரை சங்கம் எனது தாய் வீடு போன்றது என கூறி ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். இதேபோன்று ஐசரி கணேஷ் 50 ஆயிரம் ரூபாய், பஜ்ரங் கல்லூரி சார்பில் 50 ஆயிரம் ரூபாய். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு 1,250 கிலோ அரிசி மூட்டைகளை கொடுத்து உதவியிருக்கிறார்கள். இவை தவிர சின்னத்திரை மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் பெரிய நடிகர்களாக உள்ள சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, சந்தானம் உள்ளிட்டோரும் சின்னத்திரை நடிகர்களுக்காக உதவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் அரசின் உதவி கிடைக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுத உள்ளோம். அவரை நேரில் சந்திக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறோம். அதேபோன்று சீரியல் தயாரிப்பாளர்களும், இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும்போது தமிழ்நாட்டில் உள்ள தமிழ் திரை கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். உண்மையில் இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருப்பது சின்னத்திரை நடிகர்கள்தான். இவர்களுக்கு பெரிய நடிகர்கள் முன் வந்து நிவாரண தொகை வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய சின்னத்திரை நடிகர்கள், “தங்கள் குடும்பங்களில் அன்றாட உணவு, மருத்துவ செலவிற்குக்கூட கையிருப்பு இல்லாமல் அவதிப்படுகிறோம். ஒரு சிலர் வீட்டு வாடகை கட்டுவதற்குக்கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:என்.எஸ்.கே ஸ்டைலில் பிளாக் பாண்டியின் கரோனா விழிப்புணர்வு பாடல்!