கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியானப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் கதாபாத்திரமான ஜெஸ்ஸி - கார்த்திக் காதலர்கள் மத்தியில் பேசும் பெருளாக மாறினார்.
இதனிடையே திரிஷா கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த படியே குறும்படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அதை கெளதம் மேனன் இயக்குவதாகவும் செய்திகள் வெளியான. தற்போது கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
'கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்ட படத்தின் டீஸரில், திரிஷா (ஜெஸ்ஸி) கார்த்திகிடம் தொலைபேசியில் பேசுவது போல் அமைந்துள்ளது. மேலும் பின்னணியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இசை ஒலிக்கிறது. இந்த டீஸர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டீஸரில் திரிஷா பேசும் வசனங்கள் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை நினைவுபடுத்தியுள்ளது. 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தை ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்களின் படைப்பற்றால் திறன் குறைந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டில் இருந்தபடியே இந்த குறும்படத்தை உருவாக்கியதாக கெளதம் மேனன் கூறியுள்ளார். ஏற்கனவே 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தின் கதை தயாராக இருப்பதாகவும் கெளதம் மேனன் தெரிவித்திருந்தார்.
'கார்த்திக் டயல் செய்த எண்' 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தின் முன்னோடியாக இருக்குமா இதில் திரிஷாவுடன் யார் யார் நடித்துள்ளனர் என்பது படம் வெளியான பிறகே தெரியவரும். இந்த குறும்படம் சில நாள்களில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.