'அபியும் அனுவும்' படம் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். இவர் அதன்பின் தனுஷின் 'மாரி 2' படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்திருந்தார். இவர் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' மலையாளப் படத்திலும் முக்கிய வேடத்தில நடித்திருந்தார். அதன்பின் வைரஸ், லூக்கா உள்ளிட்ட திரைப்படங்களும் இவருக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தன.
'தோர்' போன்று சுத்தியலை கேட்ச் பிடிக்கும் 'மாரி 2' வில்லன் - டொவினோ தாமஸ் பதிவிட்ட வீடியோ
'மாரி 2' படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்திருந்த மலையாள நடிகர் டொவினோ தாமஸ், தோர் ஹாலிவுட் படத்தில் வரும் கதாநாயகனைப் போன்று சுத்தியலை பிடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கடைசியா இவர் நடிப்பில் ‘எடக்காடு பட்டாலியன் 06’ என்ற படம் வெளியானது. இதனிடையே டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டொவினோ தாமஸ் பின் பக்கத்திலிருந்து பறந்து வரும் ஒரு சுத்தியலைப் பிடிக்கிறார். இது 'தோர்' ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் தோர் கதாபாத்திரம் சுத்தியலை பிடிப்பது போன்று இருந்தது. இந்த வீடியோ தற்போது வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
டொவினோ தாமஸ் தற்போது 'ஃபோரென்சிக்' கிரைம் த்ரில்லரில் நடித்து வருகிறார். இதில் நடிகை மம்தா மோகன்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தவிர 'கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்', 'மின்னல் முரளி', 'பலிச்சட்டம்பி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் பணியாற்றிவருகிறார்.