லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, கோலிவுட்டில் நகைச்சுவை நடிகரானவர் நடிகர் சந்தானம். பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது நடிகராக உருவெடுத்துள்ளார். அடுத்தவர்களை சகஜமாக டைமிங்கில் கலாய்ப்பது தான் இவரது சிறப்பே. இன்று நடிகர் சந்தானம் தனது 40- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அவர் நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்த படங்களில், டாப் 5 படங்களின் பட்டியலை பார்ப்போம்...
சிவா மனசுல சக்தி:
ஜீவா ஹீரோவாக நடிக்க, சந்தானம் நகைச்சுவை நடிகராக கலக்கி இருந்த படம் சிவா மனசுல சக்தி. ஜீவா, அனுயாவின் டாம் அண்ட் ஜெர்ரி காதல் நடுவே சந்தானம் செய்யும் காமெடி இன்றும் நம்மை விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும். அதிலும் குறிப்பாக ஜீவா- சந்தானம் தனது நண்பர்களுடன் இணைந்து ஹீரோயின் அனுயாவை தொலைப்பேசி மூலம் கலாய்ப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் சந்தானத்தின் கேரியரில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அது மட்டுமின்றி இப்படத்திற்காக சந்தானத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன.
ஒரு கல் ஒரு கண்ணாடி:
ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. உதயநிதி ஸ்டாலின் இப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த முதல் படமே ஹிட் அடித்தது. அதற்கு மிக முக்கிய காரணம், இப்படத்தில் சந்தானம்- உதயநிதி ஸ்டாலின் காம்போ தான். இருவரும் இணைந்து வயிறுவலிக்க ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு படங்களில் நடித்தனர். இருப்பினும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் என்றால், அது கண்டிப்பாக 'ஒரு கல் ஒரு கண்ணாடி ' தான். அதிலும் போலீஸ் ஸ்டேஷனில் சந்தானம் செய்யும் நகைச்சுவை, இன்று வரை ரசிகர்களை சிரிக்க வைக்க தவறியதில்லை.