ஹாலிவுட்டில் 'Forrest Gump', 'Catch Me If You Can', 'The Terminal', 'Captain Phillips', 'The Da Vinci Code' உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டாம் ஹாங்ஸ்.
டாம் ஹாங்ஸ் ஆஸ்திரேலியாவிற்குத் தனது மனைவி ரீட்டா வில்சனுடன் சென்றார். அங்கு சென்ற அவர்களுக்கு கொரோனோ தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.
இது குறித்து டாம் ஹாங்ஸ் தனது சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அனைவருக்கும் வணக்கம், நானும் ரீட்டாவும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம். எங்களுக்கு சளி, உடல் சோர்வு இருப்பதை உணர்ந்தோம். ரீட்டாவுக்கு குளிர் காய்ச்சல் இருந்தது. இதனால் நாங்கள் மருத்துவரிடம் சென்றோம். அங்கு பரிசோதனையில் எங்களுக்கு கொரோனா இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுகாதாரம், பாதுகாப்புக் கருதி நாங்கள் இருவரும் தற்போது தனிவார்டில் உள்ளோம். விரைவில் இதிலிருந்து மீண்டு வருவோம். நான் எப்போதும் உங்களுடன் தொடர்பில் இருப்பேன். உங்கள் உடல்நலனை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அதில் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 122 பேருக்கு கொரோனா இருப்பதை அந்நாட்டு சுகாதார அலுவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.