ஹாலிவுட்டில் 'Forrest Gump', 'Catch Me If You Can', 'The Terminal', 'Captain Phillips', 'The Da Vinci Code' உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டாம் ஹாங்ஸ்.
புதிய படப்பிடிப்புக்காக டாம் ஹாங்ஸ் ஆஸ்திரேலியாவிற்குத் தனது மனைவி ரீட்டா வில்சனுடன் சென்றார். அங்கு சென்ற அவர்களுக்கு கொரோனோ தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.
இதனால் அவரையும் அவரது மனைவியும் பாதுகாப்புக் கருதி சிகிச்சைக்காக தனிவார்டில் வைத்துள்ளனர். இதனைத் தனது சமூக வலைதளமான ட்விட்டரில் டாம் ஹாங்ஸ் அறிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் முதல் பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வரை அவர்கள் மீண்டுவர பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
இவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்துதான் கொரோனா பாதித்ததாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் ஆஸ்திரேலிய அரசு இதனை முற்றிலும் மறுத்துள்ளது. தானும் தனது மனைவியும் அமெரிக்காவிலிருந்து வரும்போதே கொரோனாவிற்கான அறிகுறிகள் இருந்தாக டாம் ஹாங்ஸ் கூறினார்.
இதனையடுத்து டாம் ஹாங்ஸ் இன்று தனது ட்விட்டர் புதிய பதிவொன்றை இட்டுள்ளார். அதில், "அனைவருக்கும் வணக்கம், நானும் ரீட்டாவும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுக்கு கொரோனா உள்ளதால் தனிமையில் உள்ளோம். எனவே நாங்கள் இதனை வேறு யாருக்கும் பரப்ப விரும்பவில்லை. இதை நாங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் மிகக் கடுமையான தொற்றுக்கு வழிவகுத்திருக்கும்.
நானும் ரீட்டாவும் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி ஒருவரை ஒருவர் கவனித்துவருகிறோம். நடப்பு நிகழ்வுகள் அசாதாரணமானவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பேஸ்பால் அழுவதில்லை" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் டாம் ஹாங்ஸ் நீல நிற டி- சர்ட் அணிந்து பேஸ்பால் தொப்பி அணிந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க: கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட டாம் ஹாங்ஸ்