சென்னை: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பருப்பு வணிகத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டுவரும் ஜெம் குளோபல் ஃபுட்ஸ் நிறுவனத்தினர் மண்டி என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியில் மூலம் மளிகைப் பொருட்களை ஆன்லைனில் வாங்கலாம். இதற்கான விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி தோன்றி மண்டி செயலி குறித்து விவரித்திருந்தார்.
இதையடுத்து விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கு எதிராக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு விஜய் சேதுபதி ஆதரவு கொடுப்பதா எனக்கூறி வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருப்பது வணிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வணிக விளம்பரங்களில் நடிக்கும்போது, சிந்தித்து சமூகப் பொறுபோடு செயல்பட வேண்டும்.
நடிகர் விஜய் சேதுபதி நல்ல மனிதாபிமானம் உள்ள நடிகர். இருப்பினும் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்திருப்பது சிறு குறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வணிகர் சங்கங்களின் அமைப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வரும் 5ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.