சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானப்படம் 'காப்பான்'. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களுடன் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு சூர்யாவையும் கே.வி. ஆனந்தையும் நேரில் சந்தித்தார்.
பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையைப் படமாக்கி கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாயிகளின் பிரச்னையை படமாக்கியதற்கு நன்றி. கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி 'காப்பான்' படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது.
விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் தங்களுக்கு 'காப்பான்' படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் சூர்யா அளித்துள்ளார் என காப்பான் படக்குழுவினரைச் சந்தித்த விவசாயிகள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'யார் 'காப்பான்' இவர்களையும் இவர்களின் தமிழையும்' - சூர்யா ரசிகர்களால் நொந்துபோன காவல் ஆய்வாளர்!