ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடிப்பில் வெளியான படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). படத்திற்கு ஒரு பக்கம் பாராட்டு கிடைத்தாலும், மறுபக்கம் இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவாகக் காண்பித்திருப்பதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். மேலும் இதற்குப் படக்குழுவினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் எனவும் சூர்யாவுக்கு, வன்னியர் சங்கம் (Vanniyar Sangam) சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சூர்யாவுக்கு ஆதரவாக, அன்புமணி ராமதாஸுக்கு (anbumani ramadoss) கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், "அன்புமணி ராமதாஸுக்கு வணக்கம்! உங்களின் சமூகப் பங்களிப்பு நாடறிந்ததே. திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இன்று குறைந்திருப்பதற்குக் காரணம் உங்களது சமூக அக்கறையால்தான். அதற்கு எங்களின் நன்றி.
தாங்களும், தங்களின் தந்தையாரும் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பல சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முன்னின்று குரல் கொடுத்தவர்கள்.
நீங்கள் கொடுத்த குரலைத் தான் 'ஜெய் பீம்'
எல்லாவற்றுக்கும் மேலாகச் சாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துச் சமூகங்களையும் ஒருங்கிணைந்து தமிழனாக நீங்கள் பார்த்த பார்வையில் தமிழ்ப் பற்றையும், உணர்வையும் அறிந்தவர்கள் நாங்கள். அடித்தள மக்களுக்கு நீங்கள் கொடுத்த குரலைத்தான் இன்று 'ஜெய் பீம்' திரைப்படமும் கொடுத்திருக்கிறது.
சமூக அக்கறையோடும், சமூக அவலங்களின் பிரதிபலிப்பாகத்தான் பெரும்பாலும் நம் திரைப்படங்கள் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட படம்தான் இந்த ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சமூகநீதி காக்க உருவான படம்தான் இது.