தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஜெய்பீம்' ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் - சூர்யாவுக்கு ஸ்டாலின் பாராட்டு - சூர்யாவின் ஜெய் பீம்

நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள 'ஜெய்பீம்' திரைப்படத்தை பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் என 'ஜெய்பீம்' படக்குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

v
v

By

Published : Nov 1, 2021, 4:09 PM IST

நடிகர் சூர்யா நடித்துள்ள, 'ஜெய் பீம்' திரைப்படம் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, உண்மையை வெளிக்கொணர அயராது உழைக்கும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள, 'ஜெய் பீம்' திரைப்படத்தில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 'ஜெய் பீம்' திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நேற்றைய தினம் 'ஜெய்பீம்' படத்தை பார்த்தேன். அதன் நினைவுகள் மனதை கனமாக ஆக்கிவிட்டன. இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாக காட்சிப்படுத்த இயலாது என்பதை காட்டி விட்டீர்கள்.

நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சில காவல்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள் அந்த துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அதே நேரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல் துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறீர்கள். நேர்மையும் மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டி உள்ளீர்கள்.

சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப்படம். ஒரு வழக்கறிஞர் (சந்துரு). ஒரு காவல்துறை அதிகாரி (ஐஜி பெருமாள்சாமி) ஆகிய இரு தரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா அவர்கள் திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட வழக்கறிஞர் சந்துருவாகவே வாழந்துள்ளார்.

இக்கதைய தேர்வு செய்தும் அதனைப் படமாக எடுத்ததும் அதில் தானே நடித்ததும் என மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார். கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற படங்கள் ஏராளமாக வரவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும். இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது என கருதாமல் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை நண்பர் சூர்யா வழங்கியது நெகிழச் செய்தது.

இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இது போன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும். ஜெய்பீம் படம் பார்கக் நான் சென்றபோது சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதியரசர் திரு. சந்துருவை சந்தித்தேன். (நீதியரசர் என்று யாரையும் சொல்லக் கூடாது என்று சொல்பவர் அவர். ஆனாலும் எங்களுக்கு அவர் நீதியரசர்தான்!) அவர் என்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையை கொடுத்தார்கள்.

மிசா சட்டத்தின்படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அது. காவல்நிலையம் ஒன்றில் நடந்த இதே போன்ற தாக்குதல்தான் சென்னை மத்திய சிறையில் 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் இரவு எனக்கும் நடந்தது.

என் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு . அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை 'சிறை டைரி'யாக சிட்டிபாபு எழுதியுள்ளார்.

இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று 'ஜெய்பீம்' பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது. இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான ஜெய்பீம் படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்! 'ஜெய்பீம்' போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்" என ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சரிடம் நிதியுதவி வழங்கிய 'ஜெய் பீம்' சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details