தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நான்கு படங்களில் கமிட்டானேன்... ஆனால் அனைத்தும் கைவிடப்பட்டன' - நடிகர் கலையரசன் - டைட்டானிக் காதலும் கவுந்து போகும் இசை வெளியிட்டு விழா

'மெட்ராஸ்' படத்துக்குப் பின் தான் நான்கு படங்களில் ஒப்பந்தமானதாகவும் ஆனால் அவை அனைத்தும் கைவிடப்பட்டதாகவும் நடிகர் கலையரசன் கூறியுள்ளார்.

kalai
kalai

By

Published : Feb 6, 2020, 8:13 AM IST

திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிவி வி குமார் தயாரிக்கும் படம் 'டைட்டானிக் காதலும் கவுந்து போகும்'. அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆனந்தி, ஹரிகிருஷ்ணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இதில் கலையரசன் பேசுகையில், ”மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மெட்ராஸ் படத்தில் நடித்த பிறகு எனக்கு மிகவும் மெச்சூர்டான கதாபாத்திரமே கிடைத்தது. மெட்ராஸ் படத்துக்குப் பின் நான்கு படங்களில் ஒப்பந்தம் ஆனேன் அதுவும் கைவிடப்பட்டது. இப்பொழுது டைட்டானிக் எனக்கு மிகவும் முக்கியமான படம். ஏனென்றால் இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளேன். முதன்முறையாக காமெடி கதைக்களம் உள்ள படத்தில் நடித்துள்ளேன்” என்றார்.

கலையரசனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தொடர்ந்து படத்தின் நாயகி ஆனந்தி பேசுகையில், ”இந்தப் படத்தில் இசையமைப்பாளர் நிவாஸ் அற்புதமாகப் பணியாற்றியுள்ளார். நான் மிகவும் சோர்வாக இருந்தபோதெல்லாம் ’கொக்க மக்க’ பாடலைக் கேட்டு புத்துணர்ச்சிப் பெற்றுள்ளேன். அந்தளவுக்கு அந்தப் பாடல் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படம் முழுவதும் ஆடியன்சை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட படம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஜானகிராமன் பேசுகையில், ”நான் எனது வாழ்க்கையில் பெருமையாகக் கூறிக் கொள்வேன் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் எனது முதல் படம் இயக்கினேன் என்று. இயக்குநர் சுதாவிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றினேன். அதனால் எல்ல இயக்குநரிடமும் என்னால் சுலபமாகப் பணியாற்ற முடியும்.

இப்போது சிவி குமார் தயாரிப்பில் பணியாற்றியுள்ளேன். இதன் பிறகு எந்தத் தயாரிப்பாளரானாலும் சிறப்பாகப் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் இவ்வளவு தூரம் உயர்வதற்கு என்னை ஏணியில் ஏற்றி விட்டவர்கள் அதிகமாக உள்ளார்கள். அவர்களுக்குப் படத்தின் வெற்றி விழாவில் நன்றி கூறுவேன்” என்றார்.

நடன இயக்குநர் சாண்டி கூறுகையில், ”நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு ஆடியோ லான்ச்சில் கலந்துகொள்கிறேன். தயாரிப்பாளர் சிவி குமாருடன் மூன்றாவது படத்தில் பணியாற்றி உள்ளேன். நடிகர் கலையரசன் முதன் முறையாக நடனம் ஆடியுள்ளார். இதன் பெருமை என்னையே சேரும் என்று நினைக்கிறேன். தயாரிப்பாளர் சிவி குமார் இன்னும் அடுத்தடுத்து அதிக படங்கள் செய்ய வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details