சென்னை: 'எதிரிகளை வீழ்த்த எடுக்க வேண்டிய ஒரே ஆயுதம் ''கல்வி'' என்பதே அசுரன் திரைப்படம் சொல்லும் செய்தி' என்று காவல்துறை ஆணையர் படம் குறித்து விமர்சித்துள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக கடந்த வெள்ளிக்கிமை வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
'சாதியை ஒழிக்க ஆயுதமாக படிப்பு திகழ்கிறது' என்ற கருத்தை கூறுவதாக அமைந்திருக்கும் இப்படம் குறித்து, திருநெல்வேலி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு, காவல்துறை துணை ஆணையர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சனம் எழுதியுள்ளார். அதன் விவரம்,
எதிரிகளை வீழ்த்த எடுக்க வேண்டிய ஒரே ஆயுதம் ''கல்வி'' என்பதே அசுரன் திரைப்படம் சொல்லும் செய்தி.
''வெள்ளத்தால் போகாது
வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது
கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது
காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள்''
என்பதன் வெற்றிமாறனின் திரைமொழி வெர்ஷன்தான் அசுரன்.
கரிசல் எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை இவ்வளவு சுவாரசியமாக எடுக்க முடிந்ததால், இன்னும் பல தமிழ் நாவல்களை திரைப்படமாக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் வெற்றிமாறன். எழுத்தாளருக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றுத் தந்த ''அஞ்ஞாடி'' நாவலையும் அடுத்து யாரேனும் படமாக்குவார்கள் என்று நம்புகிறேன்.