சென்னை: நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் 'துப்பறிவாளன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
விஷாலின் உடல் முழுவதையும் மறைக்கும் கோர்ட், கையில் மடக்கிய குடை, ரவுண்டு தொப்பியுடன் துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது.
முதல் பாகத்தில் அடையாளமாக இருந்த கூலிங் கிளாஸ் இந்த பாகத்தில் இடம்பெறவில்லை.
'துப்பறிவாளன் 2' ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள படத்தின் கதாநாயகனும், இயக்குநருமான விஷால், கணியன் பூங்குன்றன் மற்றும் மனோ மீண்டும் வருகிறார்கள், இம்முறை லண்டனில் குற்றவாளிகளை வேட்டையாடவுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போது படத்தின் இயக்குநர் மிஷ்கினுக்கும், ஹீரோ மற்றும் படத்தயாரிப்பாளர் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் படத்தை இயக்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்தார் மிஷ்கின், இதை ஏற்றுக்கொள்ளாத விஷால், படத்தை தானே இயக்குவதாக அறிவித்தார்.
'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பில் நடந்த விவகாரங்கள் குறித்தும், படத்தின் இயக்குநர் பணியை மேற்கொள்வது குறித்தும் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்த விஷால் தற்போது இயக்குநராகவும் உருவெடுக்கிறார்.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நடிகர், இயக்குநர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராகதான் பணியாற்றி வந்தார் விஷால். பின்னர் செல்லமே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்து நடிகனாகவே தற்போது வரை பல படங்களில் ஜொலித்தார். இதையடுத்து தற்போது இயக்கம் பக்கம் திரும்பியுள்ளார்.
இதனிடையே மிஷ்கினின் சூப்பர் ஹிட் படமான துப்பறிவாளன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குவதால் படம் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பெயரை கெடுக்க விரும்பவில்லை - மிஷ்கினை சாடிய விஷால்