இந்தியாவின் புகழ்பெற்ற முதுபெரும் இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரே திரைத்துறையில் தான் ஆற்றிய சாதனைகளுக்கான மணிமகுடமாக அவரது இறுதிகாலத்தில் வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கர் விருதினைப் பெற்றார். உலகம் முழுவதுமுள்ள திரைத்துறை கலைஞர்களின் பல்கலைக்கழகமாகத் திகழும் ரேவின் படங்கள், அவரது வாழ்நாளில் ஆஸ்கருக்கு ஒரு முறைகூட பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் தன் திரைவாழ்வின் க்ளைமேக்ஸில் தான் பெற்ற ஆஸ்கரை பெரும் கௌரவமாகக் கருதுவதாக ரே தெரிவித்தார்.
கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தும், நீண்டநாள் இருதய நோயிலிருந்தும் தேறிவந்த நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் பெரும் ஊக்களிக்கும் வகையில் அமைந்தது. ரேவுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அவரது வீடு பெரும் பார்வையாளர் கூட்டத்தாலும், வாழ்த்து மழையாலும் நிரம்பி வழிந்தது.
ஆனால் அந்த நேரத்திலும் ரே, தன் 31ஆவது திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்தனை வயதில், தன் திரை வாழ்வின் இறுதி காலத்தில் அங்கீகாரங்களின் மீதான ஈர்ப்பு வற்றிப்போய் இருந்தாலும், ஆஸ்கர் விருதளித்து கௌரவப்படுத்தப்பட்டது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ”இது என் திரை வாழ்வின் நல்லதொரு க்ளைமேக்ஸ்” எனத் தெரிவித்தார்.
”விருதுகள் எல்லாம் ஒன்றுமில்லை என்னும் இடத்தை நான் தற்போது அடைந்துவிட்டேன். ஆனால் இது நான் முற்றிலும் எதிர்பார்க்காதது. ஏனென்றால் ஒரு இயக்குநருக்கு வழங்கப்படும் ஆஸ்கர், ஓர் எழுத்தாளருக்கு வழங்கப்படும் நோபல் பரிசுக்கு ஒப்பானது. அதனால் இந்த விருதிற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். இதைவிட மதிப்புமிக்க ஒன்றை நான் இனியும் என் வாழ்நாளில் எதிர்ப்பார்க்க முடியாது” என 1992ஆம் ஆண்டின் நேர்காணல் ஒன்றில் ரே தெரிவித்தார்.