கோவை அடுத்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தச் ஷமன் மித்ரு என்பவர் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் 'தொரட்டி'. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வென்றுள்ள இத்திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்த சத்திய கலா என்பவர் மாயமாகிவிட்டதாகவும், அவரது பெற்றோரே கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை மீட்டுத்தரக்கோரி தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சத்திய கலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது தந்தை ரத்தினம், தாய் பாரதி, வழக்கறிஞர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சத்திய கலா கூறியதாவது, "தன்னை யாரும் கடத்தவில்லை எனக்கூறிய அவர் தான் தனது பெற்றோரோடு சொந்த ஊரான பொள்ளாச்சியில் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தார். தயாரிப்பு தரப்பினரின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லாததால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பு தன் மீது அவதூறு பரப்பும் வகையில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
தனக்கு பேசிய சம்பளமான ஒரு லட்சம் ரூபாயில் 50 ஆயிரம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இருப்பினும் திரைப்படம் நல்ல கதையம்சத்துடன் வெளிவர உள்ளதால் அது குறித்து தனக்கு வருத்தம் இல்லை என்று தெரிவித்தார். தயாரிப்பு தரப்பினர் பாலியல் ரீதியாக ஏதேனும் தொந்தரவு அளித்தனரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதுகுறித்து தற்போது எதிர்மறையாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது பெற்றோர் குறித்து அவதூறாக பேசியதற்கு தயாரிப்பு தரப்பினர் பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார். தயாரிப்பு தரப்பினர் தன்னிடம் மூன்றாம் நபர் மூலமாக சமாதானம் பேச முயன்றதால் அதில் தங்களுக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே செய்தியாளர்களை சந்தித்தாக அவர் விளக்கமளித்தார்.