'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா, தற்போது கவுதம் கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து 'தேவராட்டம்' படத்தை இயக்கியுள்ளார்.
இதில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார்.
தென்மாவட்டங்களைக் கதைக்களமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சாதியை அடித்தளமாக வைத்துஇயக்குநர் முத்தையா படம் எடுக்கிறார் என அவரை பலர் விமர்சித்தனர்.
அதற்கு, 'கிராமத்து கதைக்களத்தை கொண்டு நான் உருவாக்கும் படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறுவதால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையையே என்னிடம் கேட்கிறார்கள். அதனால்தான் இப்படிப்பட்ட படங்களை உருவாக்குகிறேன். ஆனால் எந்த சமூகத்தையும் குறைத்துக் கூறுவதில்லை' என இயக்குநர் முத்தையா கூறிவந்தார்.
இந்நிலையில் தேவராட்டம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு இயக்குநர் முத்தையா பேசுகையில்,"தேவராட்டம் சாதியப்படம் கிடையாது. தயவு செய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படம் குடும்ப உறவுகளைப்பற்றிய படம்" என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் கவுதம் கார்த்திக் பேசுகையில், "மதுரை மக்களின் பாஷைகளையும், வாழ்க்கை முறையையும் இயக்குநர் முத்தையா கற்றுக்கொடுத்தார். அவரிடம் இருந்து அதிகம் கற்றுக் கொண்டேன். அதிகப் படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்" என்று கூறினார்.