காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தனது மகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டி கேரளாவில் ஒரு பேக்கரி கடை நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தில் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். இவரை வில்லன் கண்டுபிடித்து என்ன செய்கிறார், என்பதை ஆக்ஷன் காட்சிகளுடன் இயக்குநர் அட்லி - விஜய் கூட்டணியில் 'தெறி' படம் 2016ஆம் ஆண்டு வெளியானது.
தமிழில் 'தெறி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிகுவித்தது. தற்போது இப்படத்தை தழுவி அசாம் மொழியில் 'ரத்னாகர்' என்னும் படம் எடுக்கப்பட்டது. தெறி படத்திற்கும் ரத்னாகர் படத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். தெறியில் கதநாயகன் காவல்துறை உயர் அதிகாரியாக இருப்பார். ரத்னாகர் படத்தில் கதாநாயகன் முன்னாள் கேங்ஸ்டராக இருப்பார்.
'ரத்னாகர்' படத்தை அசாம் சூப்பர் ஸ்டார் ஜதின் பேரா இயக்கியும் தயாரித்தும் நடித்துள்ளார். அக்டோபர் 11ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இப்படம் அசாமில் வசூல் சாதனை படைத்துள்ளதாக ஜதின் பேராவுடன் இணைந்து தயாரித்த நவநிதா பேரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இப்படம் அசாமில் மட்டுமல்ல ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உள்ள அணைத்து திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது வரை இப்படம் ரூ. 9 கோடியே 23 லட்சத்தை ஈட்டியுள்ளது. அசாமில் ரூ. 9 கோடி வசூல் என்பது இந்தி திரைப்படம் ஒன்று இந்தியா முழுவதும் ரூ. 900 கோடி ரூபாயை வசூல் செய்வதற்கு சமமாகும் என்று தெரிவித்தார்.
முன்னதாக 'கஞ்சன்ஜங்கா' என்ற திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூ. 7 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த சாதனையை ரத்னாகர் படம் முறியடித்துள்ளது. இதனால் தற்போது அசாம் திரைப்பட விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படம் அங்கு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததை அடுத்து அசாம் முதலைமைச்சர் சர்பானந்த சோனோவால் ரத்னாகர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது படத்தை தனது நண்பர்களுடன் தியோட்டரிலும் சென்று பார்த்துள்ளார்.