கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'தேன்'. மலைக்கிராமங்களில் கார்ப்பரேட் நிறுவனம் புகுந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து திரைப்படம் பேசுகிறது.
பல்வேறு சர்வதேச விருது போட்டிகளில் திரையிடப்பட்டு, இப்படம் பல விருதுகளைக் குவித்துள்ளது. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு கட்டணச் சலுகை அளிப்பதாக ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களின் ரசனை அறிந்து அவர்களை மகிழ்ச்சியில் மெய் மறக்கச் செய்திடும் மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களை தயாரிப்பதிலும், அதனை வெளியிடுவதிலும், மலிவான விலையில் சிறப்பான மற்றும் தரமான திரை அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன், அதி நவீன பாதுகாப்பு அம்சங்களோடு பார்வையாளர்களுக்கு என்றென்றும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது, ஏஜிஎஸ் சினிமாஸ்.
பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு குடும்பத்தினரோடு வந்து திரைப்படங்களைக் காண்பதில் உள்ள சிரமங்களைக் கண்டுணர்ந்து, டிக்கெட் விலையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம். மேலும் தின்பண்டங்களின் விலையில் 50% தள்ளுபடியையும் வழங்கி, அவர்களின் சினிமா அனுபவத்தினை சிறப்பானதாகவும், சிக்கனமானதாகவும் அமையச்செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது, ஏஜிஎஸ் சினிமாஸ்.
ஒரு நல்ல திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அதனை சரியான தருணத்தில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்பட்சத்தில். அந்த வகையில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருந்துகளை வென்று, மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும், ஏபி புரொடக்ஷன்ஸ் தயாரித்த 'தேன்' எனும் திரைப்படத்தினை ரூ.100/-சலுகை விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கி, இத்திரைப்படத்தினை பெருவாரியான மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பங்கு கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது, ஏஜிஎஸ் சினிமாஸ்...
யதார்த்த மனிதர்களின் வாழ்வியலை, அழகியலோடு திரையில் கண்டு மகிழ்ந்திட... வாருங்கள், சினிமாவைக் கொண்டாடுவோம்..." என்று தெரிவித்துள்ளது.