நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூருக்கு அருகே உள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3ஆம் தேதி, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் மு. கருணாநிதி. பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையும் மன உறுதியும் கொண்ட இவர், நாடகம், கவிதை, சொற்பொழிவு எனத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
1941இல் வெளியான மாணவ நேசன் மாத இதழையும், தமிழ் மாணவர் மன்றத்தையும் நடத்திவந்த அவர், நாடகம் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 1944ஆம் ஆண்டு முதன்முதலில் அவரால் எழுதி அரங்கேற்றப்பட்ட நாடகம் 'பழனியப்பன்'.
இதனைத்தொடர்ந்து 1947ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி படத்தில் முதன்முதலில் வசனம் எழுதி, தனது திரையுலகப் பயணத்தை தொடங்கிய கருணாநிதியை, ஒரு சினிமா வசனகர்த்தாவாக உச்சத்திற்கு கொண்டுசென்ற படம் 'பராசக்தி`.
கருணாநிதியின் சிந்தனையோட்டம், எழுத்தாற்றலால் வெளிவந்த பராசக்தி படத்தில் இடம்பெற்ற, 'சிங்கத் திருநாடே, நீ சிலந்திக் காடாக மாறியது எப்போது?', 'வந்தாரை வாழவைக்கும் வளமிகு தமிழகமே... நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக?', 'நான் கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக', 'பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல; பக்தி, பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக' போன்ற வசனங்கள், கதைக்காக படம் என்று இருந்த நிலையை மாற்றி, வசனத்திற்காகப் படம் என்ற நிலையை தமிழ்த்திரையுலகில் ஏற்படுத்தின.
பராசக்தி படம் மூலம் திரைக்கதையிலும் வசனங்களிலும் பல புதுமைகளையும் புரட்சிக் கருத்துகளையும் புகுத்தி, வித்தியாசமான கோணத்தில் ஆழ்ந்த சிந்தனை, சமூக அவலம், ஆட்சியாளர்களின் அலட்சியம், அதிகார வர்க்கத்தின் மமதை, ஏழை, எளிய மக்கள் படும்பாடு என்று அனைத்தையும் தனது வீரியமிக்க வசனங்களால் சாடி திருப்புமுனையை ஏற்படுத்தினார் கருணாநிதி.
மந்திரி குமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் அவரது வசனங்களுக்காகவே பெரும் புகழைப் பெற்றன. முதன்முதலில் ஒரு சினிமா, கதை, வசனம் புத்தகமாக வெளிவந்தது என்றால் அது கருணாநிதி வசனத்தில் வெளிவந்த 'மனோகரா' படத்திற்குதான். அந்தப் புத்தகம் விற்பனையிலும் பெரும் சாதனை படைத்தது.