நடிகராக, இயக்குநராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக நாம் விசுவை பல படங்களில் பார்த்திருக்கிறோம், மகிழ்ந்திருக்கிறோம், நெகிழ்ந்திருக்கிறோம். ஏன் அழக்கூட செய்திருக்கிறோம். குறிப்பாக தேசிய விருது வாங்கிய ”சம்சாரம் அது மின்சாரம்’’ என்ற படம் இன்றளவும் அனைவரும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது.
வெள்ளித் திரையில் மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் அவர் கோலோச்சினார். விசுவின் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு ட்ரெண்ட் செட்டர். அந்த மேடையை பயன்படுத்தி பலர் வெளிச்சத்திற்கு வந்தனர். அதேபாணியில் மக்கள் அரங்கம் என்ற நிகழ்ச்சியையும் அவர் நடத்தினார். ஒருவகையில் பார்த்தால், பலரது வெளிச்சத்திற்கு காரணமானவராக இருந்திருக்கிறார் விசு.