பாலுமகேந்திரா. இந்தப் பெயருக்குள் எப்போதும் ஒரு அமைதி இருக்கும். அந்த அமைதியை அவருக்குள் மட்டும் அவர் வைத்துக்கொள்ளாமல் அனைவருக்கும் கடத்தினார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது பெயரை யார் உச்சரித்தாலும் அந்த உச்சரிப்பின் போது அவர்களுக்கே தெரியாமல் ஆழ் மனதுக்குள் ஒரு அமைதி உருவாகியிருக்கும். அந்த ஆழமான அமைதிதான் எல்லோருக்கும் அவரை நெருக்கமாக்கியது. பலருக்கு ஆசானாக்கியது.
அனைத்து இயக்குநர்களும் ஒவ்வொரு ஆலமரம். தன்னுடைய விழுதுகளில் அவர்களெல்லாம் பறவைகளை வளர்த்துக்கொண்டிருந்தபோது பாலுமகேந்திரா மட்டும்தான் ராஜாளிக்களை வளர்த்து கோலிவுட் வானத்தில் பறக்கவிட்டிருக்கிறார்.
அவரைப் பொறுத்தவரை தன்னைவிட தன் உதவி இயக்குநர்கள் வளர வேண்டும் அவர்கள் மூலம் சினிமா வாழ வேண்டுமென்பதில் மிக மிக கவனமாகவும், அக்கறையாகவும் இருந்தார். அவருடைய உதவி இயக்குநர்கள்தானே தமிழ் சினிமா இன்று உயிர்ப்போடும், ஈரத்தோடும் இருக்க உதவிக் கொண்டிருக்கிறார்கள்.
“என்னுடைய நிலத்தில் விழுந்த வித்துக்கள் வீரியமானவை” என்று அவர் சொல்வதற்கு எவ்வளவு பெரிய கர்வம் இருந்திருக்க வேண்டும். அதைவிட தன்னுடைய பிள்ளைகள் மீது அவருக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். உலகத்திலேயே கொடுத்து வைத்தவர்கள் பாலுமகேந்திராவின் பிள்ளைகள்தான்.
ஒரு படைப்பாளன் எந்த அளவு உச்சாணிக் கொம்பில் படைப்பு திமிரால் ஏறி நிற்கிறானோ அதேபோல் தன் மீது தவறென்று தெரிந்தால் உடனடியாக இறங்கிவர வேண்டும். பாலுமகேந்திரா அப்படித்தான் வாழ்ந்தார்.
தன்னுடைய நியாயமான படைப்பின் மீது கை வைக்க துடித்த கோடிகள் புரளும் கைகளுடன் சண்டை பிடிக்கவும் அவருக்கு தெரியும், தன் அலுவலகத்தில் பணிபுரியும் சிறுவனிடம், தன்னுடைய தவறை தெரிந்துகொண்டு மன்னிப்பு கேட்கவும் முடியும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் யதார்த்தத்தை மீறாமல் பல கட்டுடைப்புகளை செய்தன. இரண்டு மனைவிக்காரர்களின் கதை பாலுமகேந்திராவுக்கு கை வந்த கலை என்று பலர் கூறுவதுண்டு. கிண்டல் பண்ணும் அளவுக்கு அந்த கலை ஒன்றும் தரம் தாழ்ந்தது இல்லை.
”உனக்கு நடப்பதை வைத்து எழுது” என்று அவர் கூறுவதுண்டு. ரெட்டை வால் குருவி, மறுபடியும் போன்ற கதைகளை அவர் எடுத்தது எல்லாம் இப்படி வாழுங்கள், இப்படி வாழாதீர்கள் என்று பாடம் நடத்துவதற்கு இல்லை. இப்படியும் ஒருவன் இச்சமூகத்தில் வாழலாம் என்ற யதார்த்தத்தை கூறுவதற்காகத்தான்.
பாலுமகேந்திரா என்ற ஒருவர் வந்த பிறகு தமிழ் சினிமா தனது முகத்துக்கு வேறு நிறத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டது. அவரது பிள்ளைகள் அதை பத்திரமாய் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரும், அவரது பிள்ளைகளும் தமிழ் சினிமாவுக்கு பூசிய நிறம்தான் நிரந்தரமானது.
பாலுமகேந்திரா தூய்மையாளன் கிடையாதுதான். மனிதர்களுக்கே உண்டான அழுக்குகள் அவருக்குள்ளும் உண்டுதான். ஆனாலும் அவர் ஏன் மதிக்கப்படுகிறாரென்றால், இச்சமூகம் எந்தெந்த யதார்த்த விஷயங்களை அழுக்கு என்று முத்திரைக் குத்தி வைத்திருக்கிறதோ அந்த முத்திரையை சுமந்துகொண்டு யாருக்கும் மறைக்காமல் வாழ்ந்தார்.
படைப்பு ஒன்றை படைத்த பிறகு அந்த படைப்பாளியால் அமைதியாக இருக்க முடியாது. வேறு வேறு படைப்புகள் அவனுள் எழுந்துகொண்டே இருக்கும். ஆனால், தற்கால சூழலுக்கு ஒத்துவரமாட்டார் என்று அந்த படைப்பாளியை ஒதுக்கி வைக்க முயல்வதெல்லாம் அறமல்ல. அப்படிப்பட்ட காலகட்டத்தில் அந்த படைப்பாளியின் உள்ள கொதிப்பு, தான் ஒரு ஊனமுற்றவரோ என்ற எண்ணத்திற்கு அவரை நகர்த்தும்.
அப்படித்தான் பாலுமகேந்திராவை கோலிவுட் கோடிகள் ஒதுக்கி வைத்தன. அறம் மீறாத படைப்பை, மிகச்சிறந்த படைப்பாளிகளை இச்சமூகத்திற்கு கொடுத்த அவரை இப்படி ஒதுக்கி வைத்ததெல்லாம் எவ்வளவு பெரிய அவலம்.
இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் சிறிதளவும் கவலை கொள்ளவில்லை. சினிமாவை பாதுகாக்க தன்னுடைய பிள்ளைகள் சென்றுவிட்ட பிறகு அவர் தந்தை ஸ்தானத்தில் சிறிது காலம் ஓய்வில் இருந்தார். அந்த ஓய்வு அவர் விரும்பி எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால் அந்த சிறிய ஓய்விலும் வீரியம் குறையாமல் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார். அதை நிறுத்தியிருந்தால் அவரது மூச்சு அன்றே நின்றிருக்கும்.
கடைசிக்காலத்தில் யாருக்குதான் கவலை வராது. அவருக்கும் கவலைகள் இருந்தன. ஆனால் தன்னைப் பற்றிய கவலைகளைவிட சினிமா குறித்த கவலைகள் அதிகம் இருந்திருக்கும். அந்த கவலைகள் அவரை ஆட்கொண்டிருக்கும்போது, ’அதான் பிள்ளைகள் இருக்கிறார்களே அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற நம்பிக்கை அவரை ஆசுவாசப்படுத்தியிருக்கும்.
”மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்” என்று வள்ளுவர் எழுதிய குறள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பாலுமகேந்திராவுக்கு நிச்சயமாய் பொருந்தும். அவருக்கு அவரின் பிள்ளைகள் வாங்கி கொடுத்திருக்கும் பெயரும், சினிமாவுக்கு அவர்கள் செய்துகொண்டிருக்கும் பணியும் அப்படி.
ஆம், அவரது பிள்ளைகள் இருக்கிறார்கள். தமிழ் சினிமா யதார்த்தத்தை மீறாமல் அவர்கள் பாதுகாத்துக்கொள்வார்கள். நன்றி பாலுமகேந்திரா சார்...
இதையும் படிங்க:பாலுமகேந்திரா - கண்களிலும், எண்ணங்களிலும் காடு வைத்திருந்தவர்...