தமிழ் சினிமாவின் முதல் ஸ்பூஃப் படமான 'தமிழ்ப் படம்' 2010 ஆம் ஆண்டு வெளியானது. சிவா நடிப்பில் சி. எஸ். அமுதன் இப்படத்தை இயக்கினார். ஒய்நாட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் தயாரித்திருந்தார். இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப்பின் வெளியான 'தமிழ்ப் படம் 2' ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. சமூக வலைதளத்தில் மிக முக்கிய இடத்தை வகித்திருப்பது மீம்கள். வடிவேலு மீம்களுக்கு அடுத்தபடியாக சமூக வலைதளத்தில் வலம் வருவது, தமிழ்ப் படம் முதல் பாகத்தில் இருக்கும் மீம்கள்.
தமிழ்ப் படத்தில் ஒரு காட்சியில் 'தளபதி' படத்தின் காட்சியை நையாண்டி செய்யும் விதமாக, மருத்துவமனையில் அடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிபட்டிருக்கும் அடியாள் ரமணாவை மம்மூட்டியைப் போல தோற்றமளிக்கும் கதாபாத்திரம் தேடி வருவார். ஆனால், அவர் முதலில் அணுகும் நபர் விஜய்காந்த் நடித்த 'ரமணா' படத்தின் வசனத்தை பேசுவார். அப்போது உடனிருப்பவர், இது வேற ரமணா என்பார்.