சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் நடிக்கவிருப்பதாக நடிகை பூர்ணா உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், ”இயக்குநர் ஏ.ஏல். விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் 'தலைவி' படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் இணைந்து இரும்பு பெண்ணான ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இணைந்து பணியாற்றுவதை பொன்னான வாய்ப்பாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி, ஜானகி ராமச்சந்திரனாக நடிகை மதுபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
நடிகர் பிரகாஷ்ராஜ், திமுக தலைவர் கருணாநிதியாக நடிப்பதாகக் தெரிகிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் தோழியின், அவரது வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றியவருமான சசிகலாவின் கேரக்டரில் யார் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து தற்போது அந்தக் கேரக்டரில் பூர்ணா நடிக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபிரி மீடியா, கர்மா மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.