சென்னை: 2019ஆம் ஆண்டு ட்விட்டரில் நிகழ்ந்த செல்வாக்குமிக்க தருணங்களில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் குறித்து பதிவுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சமூக வலைதளமான ட்விட்டர் இந்த ஆண்டில் நிகழ்ந்த செல்வாக்கு மிகுந்த டாப் தருணங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் தல அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
படத்தின் அறிவிப்பு தொடங்கி, ஃபர்ஸ்ட் லுக், ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில், டீசர், ட்ரெய்லர் என ஒவ்வொரு அப்டேட்டையும் #viswasam என்ற ஹேஷ்டாக்கில் இந்தியா முழுவதும் பரவச் செய்து ட்ரெண்டாக்கிய ரசிகர்கள், இணையத்தை தெறிக்கவிட்டனர்.
2019ஆம் ஆண்டு ட்விட்டர் செல்வாக்குமிக்க தருணத்தின் டாப் இடத்தில் விஸ்வாசம் விஸ்வாசம் படத்துக்கு அடுத்தபடியாக மக்களவைத் தேர்தல் #LokshabaElection2019, கிரிக்கெட் உலகக்கோப்பை #CWC2019, மகேஷ் பாபுவின் #Maharishi, தீபாவளி வாழ்த்துகள் #HappyDiwali என அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
ஆண்டுதோறும் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள், நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்கள் வெளியிடும் இந்தப் பட்டியலில், ட்விட்டர் தளத்தில் இந்த ஆண்டில் பாலிவுட் திரையுலகை ஓரம்கட்டி தென்னிந்திய திரைப்படங்கள் டாப் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தச் சாதனையை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா. இது குறித்து அவர் தனது ட்விட்டரில், இந்தப் பெரிய தருணத்தை தந்த ரசிகர்களுக்கு நன்றி. #ViswasamAnaFans (விஸ்வாசமான) என ஹேஷ்டாக்கில் குறிப்பிட்டுள்ளார்.
கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் அதிலுள்ள நடிகர்களையும் தாண்டி, சிறப்பான பப்ளிசிட்டிதான் அந்தப் படத்தை மூலை முடுக்குகளில் இருப்பவர்களிடத்திலும் சென்று சேர்த்து பார்க்கவைக்கிறது.
தற்போது சமூக வலைதளங்களின் வரவால் ரசிகர்களே தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் படம் அறிவிப்பில் தொடங்கி, ஒவ்வொரு விஷயத்தையும் அப்டேட்டாக பதிவிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தல அஜித், தளபதி விஜய்யின் ரசிகர்கள் இந்த வேளையில் தீயாய் செயல்படுகின்றனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தை தங்களது வித்தியாசமான பதிவுகளால் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்து, எல்லா தரப்பினரையும் பார்க்கவைக்க ரசிகர்கள் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் மகத்தானதுதான்.