கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'தேன்'. மலைக்கிராமங்களில் பெருநிறுவனம் புகுந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து திரைப்படம் பேசுகிறது.
பல்வேறு சர்வதேச விருது போட்டிகளில் திரையிடப்பட்டு, இப்படம் பல விருதுகளைக் குவித்துள்ளது. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு அனைத்துத் தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
'தேன்' படத்தில் பூங்கொடி பாத்திரத்தில் நடித்த அபர்ணதி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார். படத்தின் ஆத்மாவை நிலைநிறுத்தும் நடிப்பு என்றும், படத்திற்கான முதுகெலும்பாக அவரது நடிப்பு இருப்பதாகவும் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
படத்தில் நடித்து குறித்து நடிகை அபர்ணதி கூறியதாவது, "'தேன்' படத்திற்கு கிடைத்துவரும் நேர்மறையான பாராட்டுகள் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அனைத்துப் பாராட்டுகளும் இயக்குநர் கணேஷ் விநாயகன், ஒளிப்பதிவாளர் சுகுமாரன் ஆகியோரையே சேரும். இந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய முழுக் காரணமும் அவர்கள்தான்.
மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும்பொருட்டு, படத்தின்போது ஷாம்பு, மேக்கப் என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்கள்தான் பரிந்துரைத்தார்கள். மலைப்பகுதியில் இருந்தபோது நான் அந்தப் பகுதி பெண் போலவே மாறினேன். படத்தின் கதை நடக்கும் பெரும்பகுதி, ஜெயில் காட்சிகள் கண்ணகி நகரில் நடைபெற்றது.