இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவராக மதிக்கப்படும் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ஊடக, பொழுதுபோக்கு பணிக்குழுவின் தெற்குப் பிராந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டி. ஜி. தியாகராஜன் கூறுகையில், 'இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு எனக்கு அளித்துள்ள இந்த கௌரவம் குறித்து நான் பெருமை அடைகிறேன். தற்பொழுது பிற தொழில் துறைகளைப்போலவே திரைத்துறையும் ஒரு மாபெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. இத்தகைய சிக்கலான காலகட்டத்தில் இப்படியான புதிய பொறுப்பை நான் பெற்றுள்ளதால், எனக்கு இன்னும் சவாலான பல பணிகள் காத்துள்ளன. அவற்றைச் செய்து முடிக்கும் நன்னாளை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். திரைத்துறையில் எனது நீண்ட பயணம் எனக்குத் தந்துள்ள அனுபவத்தினால் எனது இப்புதிய பணியில் நான் வெற்றியை அடைவேன் என்று நம்புகிறேன். 125 வருட காலப் பாரம்பரியமிக்க இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதே ஒரு சிறப்புமிக்க கௌரவமாகும். என்னால் இயன்றவரை இப்பதவிக்கு மேலும் கௌரவத்தைச் சேர்க்க முயற்சி செய்வேன்' என்றார்.
டி. ஜி. தியாகராஜன் இதுவரை 5000க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களையும், 40 திரைப்படங்களையும் நான்கு தென்னிந்திய மொழிகளில் தயாரித்துள்ளார். ‘சத்யா மூவீஸ்’ என்ற புகழ்பெற்ற பட நிறுவனம் மூலம் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்ஜீவி, சிவாஜி கணேசன் போன்றோர் நடித்த படங்களை தயாரித்துள்ளார்.