ஹைதராபாத்: தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'ஜெர்சி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான படம் 'ஜெர்சி'. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். ஹரீஷ் கல்யாண், சனுஷா, சத்யராஜ், சம்பத், ஜெயப்பிரகாஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தை கெளதம் என்பவர் இயக்கியிருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ்-டிராமா ஜானரில்(Sports-Drama jenre) வெளிவந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. படத்தில் நானியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில், ஜெர்சி படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் நானி கதாபத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்கவுள்ளார். தெலுங்கில் இயக்கிய அதே இயக்குநரே இந்தியிலும் இயக்கவுள்ளார். இதையடுத்து படத்தை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, தெலுங்கில் சக்கை போடு போட்ட 'அர்ஜுன் ரெட்டி' படத்தை அச்சு பிசகாமல் அப்படியே இந்தியில் 'கபீர் சிங்' என்ற பெயரில் அதே இயக்குநரை வைத்து பாலிவுட்டினர் ரீமேக் செய்தனர். அந்தப் படம் இந்தியில் ஹிட்டடிக்க தற்போது தங்களது அடுத்த ரீமேக்காக 'ஜெர்சி' படத்தை தேர்வு செய்துள்ளனர்.