கரோனா தொற்று அச்சம் காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து தற்போது வரை இந்தியா முழுவதும் அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனை நம்பியிருந்த பல தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு திரை பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளதவியும் வழங்கினர்.
அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி 'கரோனா க்ரைசஸ் சாரிட்டி' (Corona Crisis Charity) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நிதி திரட்டி உதவி வருகிறார். இதற்கு தெலுங்கு முன்னணி நடிகர்கள் நிதியுதவி அளித்தனர்.
தற்போது தமிழ், மலையாளம் திரையுலகில் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்க அரசு அனுமதியளித்துவிட்டது. இதனால் தெலுங்கு சினிமாவில் இறுதிக்கட்டப் பணிகள் எப்போது தொடங்கும் என சிரஞ்சீவி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 21) நடைபெற்றது.