தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் கிருஷ்ணாவின் பெயர் முக்கியமான ஒன்று. 1960களில் நடிகராக அறிமுகமானவர் சிவராம கிருஷ்ணா கட்டமனேனி. இவர் நடித்த சில படங்களிலேயே ரசிகர்களுக்கு கிருஷ்ணாவை பிடித்துவிட்டது. அப்போது பெரிய நட்சத்திரங்களாக இருந்த என்.டி.ராமாராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடன் இணைந்தும் நடித்தார்.
நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய கிருஷ்ணா, தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்தார். தனது 'பத்மாலயா நிறுவனம்' மூலம் பெரிய நடிகர்களை வைத்தும் படங்களை எடுக்க ஆரம்பித்தார். கிருஷ்ணாவுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். இதில் ரமேஷ் பாபு, மகேஷ் பாபு, மஞ்சுளா ஆகியோர் சினிமாவுக்குள் நுழைந்தனர். முதலில் நடிக்க வந்த ரமேஷ் பாபுவுக்கு ரசிகர்களிடமிருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தை அவர் கவனித்துக்கொண்டார்.
மஞ்சுளா, மலையாள இயக்குநர் சிபி இயக்கிய 'சம்மர் இன் பெத்லகேம்' படத்தின் முலம் அறிமுகமானார். பின் 'ஷோ' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தேசிய விருதும் வாங்கியது. மஞ்சுளா திரைப்படத் தயாரிப்பாளர், நடிகருமான சஞ்சய் ஸ்வரூப்பை திருமணம் செய்துகொண்டு சின்ன சின்ன கதாபாத்திரங்கள் பட தயாரிப்பு என தனது கவனத்தை செலுத்திவருகிறார்.
கடைசியாக மகேஷ்பாபு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்பா கிருஷ்ணா, அண்ணன் ரமேஷ் பாபு ஆகியோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், `ராஜகுமாருடு' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ’நந்தி’ விருது கிடைத்தது.
பின் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், 'ஒக்கடு' படத்தில் நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றி ஆந்திராவில் மகேஷ் பாபுவுக்கு ரசிகர் பட்டாளம் அமைக்க அடித்தளம் போட்டது. இவரது திரைவாழ்க்கையில் 'வம்சி' திரைப்படம் முக்கியமான ஒன்று. காரணம் 'வம்சி' படத்தில் மகேஷுக்கு ஜோடியாக நடித்த நர்மதாவைத்தான் அவர் திருமணம் செய்துகொண்டார்.