திரைத்துறையில் தனக்கே உரித்தான பாணியில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டிருக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' அறிவித்துள்ளது.
'அபூர்வ ராகங்கள்' தொடங்கி 'தர்பார்' வரை பட்டிதொட்டியெங்கும் நிறைந்திருக்கும் ஒரே பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1975ஆம் ஆண்டில் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கிய ரஜினிகாந்த், பில்லா, முள்ளும் மலரும், மூன்று முகம், தளபதி, பாட்ஷா, படையப்பா, சிவாஜி, எந்திரன் என வெரைட்டியான மாஸ் கேரக்டர்களில் நடித்து, தமிழ்த் திரையுலகின் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறார்.
திரைப்படத்துறையில் 44ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 167 படங்களில் நடித்திருக்கிறார்.
தனக்கே உரித்தான பாணியில் தனது அசாத்திய நடிப்பால், ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டிருக்கும், ரஜினிகாந்துக்கு மத்திய அரசு கடந்த 2000ஆம் ஆண்டு 'பத்ம பூஷண் விருதும்', 2016ஆம் ஆண்டு 'பத்ம விபூஷண் விருதும்' வழங்கி கவுரவித்தது. மேலும், தமிழ்நாடு அரசும் 1984ஆம் ஆண்டு ’கலைமாமணி விருது’ வழங்கி கவுரவித்தது.