நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றை, பெயர் குறிப்பிடாமல் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருந்தார். அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,
நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக சொல்லும் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம். அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும் பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.
இந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும், ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை... மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும், அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அதுசரி... எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது? அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்? ஒன்றும் புரியவில்லை.
நான் பத்திரிகை, தொலைக்காட்சி, முகநூல், ட்விட்டர், வலைதளங்கள், எல்லாவற்றிலும் வரக்கூடிய செய்திகளில் அப்டேட்டாக இருப்பவன். எனக்கே தெரியவில்லை நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்! எங்கு நடந்தது? சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்? மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டது மாதிரி ஒரு கடிதம்.. அதில் என்ன புரிந்து கொண்டு யாரைக் கண்டிப்பது? முதலில் உங்களை சீண்டுமளவிற்கு எங்கள் தம்பிகளுக்கும் அண்ணன்களுக்கும் வேலை இல்லாமலில்லை. எங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை.
தமிழ்த் தேசிய நோக்கோடு ஓடும் அண்ணன் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு தமிழ்த் தேசிய இலக்கும்... தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டமும், சுரண்டப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பெரும்பணிகளில் ஈடுபடவே நேரம் போதுமானதாக இருக்கிறது. இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியலில் அங்கம் வகிப்பவரா என்ன? ஏதோ சும்மா மெரினா பீச்சில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அடி விழப்போகுது எனத் தெரிந்ததும் ஓடி ஒளிந்துகொள்ளும் போலிப் புரட்சி செய்ய எம் பிள்ளைகளுக்கு தெரியாது. வீர வழி வந்த எம்பிள்ளைகளில் எத்தனை பேர் சமூக அவலங்களை எதிர்த்து சிறைபட்டு அடிபட்டு மிதிபட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
அது தெரிந்தால், ஏன் வாருங்கள். ஒரேமேடையில் நீங்கள் செய்த நல்லதும் நான் செய்த நல்லதையும் பேசுவோம் என என் அண்ணனிடம் சவால் விடப் போகிறீர்கள்..? நீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை. உங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம்தமிழர் செய்தி என்றாலே பாதி மீடியாவினருக்கு கசப்பு. அப்புறம் எப்படி உங்களுக்குத் தெரிந்திருக்கும்? ஆனால் யாரையும் முன்னிருத்தி காசு வாங்கி பிழைப்பு நடத்துவதில்லை. நாங்களும் நல்லது செய்கிறோம். அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம்.