கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்துவருகின்றனர். மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்காவது அரசு அனுமதி தர வேண்டும் என்று இந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அக்கோரிக்கையை ஏற்று, வரும் 11ஆம் தேதி முதல் சினிமா, சின்னத்திரையின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கலாம் என்று அனுமதி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கரோனா பாதிப்பின் காரணமாக, கடந்த 50 நாட்களாக எந்தப் பணியும் நடக்காததால், பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தத் தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய (போஸ்ட் புரொடக்ஷன்) பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதியளிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் பழனிசாமி அனுமதியளித்துள்ளார்.