ஐஎம்டிபியில் புதிய சாதனை படைத்த 'ராட்சசன்' - ராட்சசன் புதிய சாதனை
சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் ஐஎம்டிபி இணையதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
![ஐஎம்டிபியில் புதிய சாதனை படைத்த 'ராட்சசன்' ராட்சசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:07:35:1597646255-320-214-4642156-thumbnail-3x2-vishnu-1708newsroom-1597646203-432.jpg)
'முண்டாசுப்பட்டி' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ராம்குமார் 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் அமலாபால் நடிப்பில் இயக்கிய படம் ‘ராட்சசன்’. திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாது வசூலிலும் சாதனை படைத்தது. மேலும் விஷ்ணு விஷால் தான் நடித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற படம் இதுதான் என்றும் கூறியிருந்தார்.
இப்படத்தை ஆக்ஸஸ் பிலிம் பேக்டரிக்காக ஜி. டில்லிபாபு தயாரித்திருந்தார். இதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசைக்கோர்வைகள் பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்தது. அதுமட்டுமல்லாது இப்படம் தெலுங்கில் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் - அனுபமா நடிப்பில் 'ராக்சடு' என்ற பெயரில் ரீமேக் ஆனது.
தற்போது ‘ராட்சசன்’ ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளை பெற்ற தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. 'ராட்சசன்' படத்திற்குப் பிறகு 'விக்ரம் வேதா', 'நாயகன்', 'அன்பேசிவம்', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் இந்திய படங்கள் வரிசையில் ராட்சசன் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 'பதேர் பாஞ்சாலி', 'கோல்மால்' ஆகிய திரைப்படங்கள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனையை அடுத்து ராட்சசன் படக்குழுவினர் சமூக வலைதளத்தில் தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.