தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சூர்யாவை விமர்சிப்பது எந்தவகையிலும் நியாயம் இல்லை' - திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

கல்விப் பணியில் பெரும் பங்கெடுத்துச் செயலாற்றிவரும் நடிகர் சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

jai bhim
jai bhim

By

Published : Nov 16, 2021, 2:27 PM IST

ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). இதில் ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan), பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் (amazon prime) ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது.

இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் (TN CM Stalin), கமல் ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அதிகாரத்தை எதிர்த்துச் சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக சில காட்சிகளும், பெயரும் உள்ளதாக கூறி அன்புமணி ராமதாஸ் கண்டம் தெரிவித்து கடிதம் ஒன்றை சூர்யாவிற்கு எழுதியிருந்தார்.

இதையடுத்து சூர்யாவிற்கு வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பல நிர்வாகிகள் நெருக்கடிகளும் எச்சரிக்கையும் விடுத்த வண்ணம் உள்ளனர்.

இருப்பினும் திரைப் பிரபலங்களான பா. இரஞ்சித் உள்ளிட்டோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து '#WeStandWithSuriya' என்னும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், டி. ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சூர்யாவை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என அன்புமணி ராமதாஸுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், "மரியாதைக்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த 'ஜெய்பீம்' திரைப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும் என வேண்டுகோள்வைத்தீர்கள்.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

அந்தக் காட்சி தொழில்நுட்பக் கலைஞர்களின் தவறான புரிதலால் இடம்பெற்றுள்ளதை அறிந்து தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா நீக்கிவிட்டார்.

அந்த முத்திரை இடபெற்றதில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நடிகர் சூர்யாவிற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை. இருப்பினும் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்துவருவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

இந்தச் செயல் மிகவும் வருத்தமளிக்கிறது. அரசியல், சாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்புநிலை மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களது கல்விப் பணியில் பெரும் பங்கெடுத்துச் செயலாற்றிவரும் நடிகர் சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் சூர்யா மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details