தமிழ் திரைத்துறை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கவுண்டமணி. இன்றைய சமூக வலைதள உலகத்திலும் இவரின் பங்களிப்பு அதிகம். மீம்ஸ் கிரியேட்டர்களின் முடிசூடா மன்னர்களில் இவரும் ஒருவர். காரணம் தனது எதார்த்த நகைச்சுவையாலும், பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்ப்பதில் இவர் தான் கெத்து.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வல்லகுண்டாபுரம் கிராமத்தில், 1939ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி, கருப்பையா-அன்னம்மாள் என்ற தம்பதிக்குப் பிறந்தவர் இந்த சுப்பிரமணியன் கருப்பையா (எ) கவுண்டமணி. இளமைப் பருவத்தில் மேடை நாடகங்களில் நடித்த இவர், பாமர மக்கள் மொழியில் பேசி அப்போது மக்களைக் கவர்ந்தார்.
அவர் நடித்த நாடகமொன்றில், ஊர் கவுண்டர் என்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக இவருக்கு கவுண்டமணி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது ஊடக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பாக்யராஜ், “ கவுண்டமணி பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்ப்பதால், அவருக்கு கவுன்டர் மணி என்று, நான் தான் பெயர் வைத்தேன். காலப்போக்கில் அது கவுண்டமணி என்று மாறியது” எனக் கூறியிருந்தார்.
ஆரம்பத்தில், சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்கள் மூலம் தமிழ் திரைத்துறையில் தலைகாட்டிய இவர், ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் 'பத்த வச்சிட்டேயே பரட்டை' என்று இவர் பேசி நடித்த வசனம் கவுண்டமணியை பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. அந்தப் படத்தில் கமலுக்கு நிகராக ரஜினியை மக்கள் மணங்களில் கொண்டு சேர்த்தது, கவுண்டமணி பேசிய இந்த ‘பரட்டை’வசனமே.
பின்னர், தனி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கவுண்டமணிக்கு, இரட்டை மாட்டுவண்டி ஜோடியாக இணைந்தவர்நடிகர் செந்தில். இந்த இரட்டையர்கள் ஜோடி, அடுத்து வந்த இரண்டு தசாப்தங்களுக்கு தமிழ் சினிமாவில் தங்களை தவிர்க்க முடியாத ஜோடியாக நிலைநிறுத்திக் கொண்டது வரலாறு. சில நேரங்களில் உச்ச நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிடும் ஆனால் அவர் கிடைப்பது அரிது. இவர்களின் நகைச்சுவையால் மட்டும் பெரும் வெற்றி கண்ட படங்களும் உண்டு.