சென்னை:தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் நடிகர் தாமு. நடிகர் மட்டுமின்றி கல்விக்காக சிறந்த சேவையாற்றி வருபவர். கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.
இந்த விருது பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக ஜேகே அறக்கட்டளை அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், நடிகர் தாமு, ஜேகே கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜேகே, இளம் விஞ்ஞானி ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முன்னதாக, மறைந்த நடிகர் விவேக்கின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் நடிகர் தாமு பேசும்போது, “கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயாவை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் வருவதற்கு தாமதமான காரணத்தினால், என்னுடைய மிமிக்ரி திறமையை வைத்து சுமார் மூன்று மணி நேரம் கூடியிருந்த கூட்டத்தை கலகலப்பாக்கினேன்.இ தை அறிந்த அப்துல் கலாம், அந்த மேடையிலேயே என்னிடம், “நீ கல்விப்பணிக்காக உன்னை கொடுத்து விடு” என கூறினார். உடனே சரி என கூறிவிட்டேன்.