நடிகை டாப்சி சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் முல்க் திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் 'தப்பட்'.
பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் டாப்சி இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திருமணமான புதிதில் சந்தோஷமாக உள்ள தம்பதிக்குள், சில மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்குள் ஏற்படும் சில பிரச்னைகள் காரணமாக பிரிந்து வாழ முடிவு செய்கின்றனர். அதற்குப் பிறகு எப்படி வாழ்க்கையை சரிசெய்து டாப்சி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதையாகும். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதுதவிர டாப்சி தற்போது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'சபாஷ் மித்து', 'ஹசீன் தில்ருபா' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சந்தானத்திற்கு டிஜிட்டல் கட்அவுட் வைத்த ரசிகர்கள்!