நடிகை டாப்சி சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் முல்க் திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் 'தப்பட்'. பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.
திருமண உறவில் துணைவரின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்து பேசும் இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லரில் டாப்ஸியின் கணவர் அவரை அறையும் காட்சிகளும், அதைத் தொடர்ந்து பார்வையாளர்களுடன் டாப்ஸி உரையாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களிடைய படம் குறித்து மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இப்படத்திற்கு மூன்று மாதம் வரி விலக்கு அளிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த வரிவிலக்கு குறித்து வணிக வரித்துறை உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், தப்பட் படத்தின் கதை கருவை கொண்டு எஸ்ஜிஎஸ்டியிலிருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒற்றை திரையரங்கம், மல்டி ப்ளெக்ஸ் திரையரங்கில் மூன்று மாதத்திற்கு தப்பட் படத்தின் டிக்கெட்டில் எஸ்ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டாம் என்றார்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சினிமா டிக்கெட் விலையில் 18 விழுக்காடு வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி மாநில அரசுக்கு 9 விழுக்காடும் மத்திய அரசுக்கு 9 விழுக்காடும் வரியாக பார்வையாளர்கள் செலுத்தி வருகின்றனர். சமீப காலமாக பெண்கள் நலன் சார்ந்த படம், சமூக அக்கறை கொண்ட படங்களுக்கு மாநில அரசுகள் வரிச்சலுக்கை அளித்துவருகின்றன.