இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் இன்று (மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சிறு குறு தயாரிப்பாளர்களின் தேவையை அறிந்து ஓடிடி தளம் ஆரம்பிக்கப்போகிறேன்.
அதற்கு முன்பு டி.ஆர். நியூ டிவி, டி.ஆர். லட்சயா டிவி என்கிற யூ-ட்யூப் சேனலும் ஆரம்பித்துள்ளேன். இலட்சிய திமுகவின் லட்சியப் பயணம் தொடரும். இனி ஆன்மிக அரசியல்தான் கையில் எடுக்கப்போகிறேன்.
சினிமா தியேட்டரில் கூட்டம் வருவதில்லை. உள்ளாட்சி வரி எட்டு விழுக்காடு நீக்கவில்லை. 12 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்கவில்லை. திரையரங்குகளில் 50 விழுக்காடு கூட்டம்தான் வருகிறது.
ஆனால் தேர்தல் பரப்புரைக்கு லட்சக்கணக்கில் கூட்டம் வருகிறது. அவர்களுக்குக் கரோனா வராதா? மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு வாக்களித்தால் பாஜகவுக்குப் போகிறது. இந்த மின்னணு வாக்குப் பதிவுக்குக் காரணமே காங்கிரஸ் - திமுக கூட்டணிதான்.
இப்போது மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிராகப் பேசிவரும் ராகுல் காந்தி அப்போது இந்த வாக்குப்பதிவுக்கு எதிராக ஏன் போராடவில்லை. தனித்தன்மை தனித்திறமை முக்கியமில்லை தனித்து எவ்வளவு ஓட்டு வாங்குகிறேன் என்பதுதான் முக்கியம்" என்றார்.
அதன்பின் செய்தியாளர்கள் ஆன்மிக அரசியல் என்று சொன்ன ரஜினி அரசியலுக்கு வரவேயில்லை. இப்ப நீங்களும் ஆன்மிக அரசியல்ன்னு சொல்றீங்களே என்ற கேள்விக்கு, ரஜினியுடன் என்னை ஒப்பிட வேண்டாம். நான் என்னுடைய யூ-ட்யூப் சேனலை மார்ச் 31ஆம் தேதி ஆரம்பிக்கப்போகிறேன் என்று தெரிவித்தார்.