தமிழ்நாடு அரசியல் களம் அவ்வப்போது சூடு பிடிப்பது வழக்கம். கடந்த வாரங்களில் அரசியலில் ரஜினி-கமல் இணைந்து 2021ல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பேச்சுகள் ஒலித்தன.
2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சிகள் தங்களது வேலையை இப்போதே தொடங்கிவிட்டன. அரசியலில் ஜூனியராக இருந்தாலும் சீக்கிரமாக வந்து தன்னுடைய பலத்தை கமல் ஏற்கனவே காட்டியிருந்தாலும், ரஜினியோ இதுவரை கட்சி தொடங்கவில்லை.
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் வந்துவிட்டதாக ரஜினி-கமல் அவ்வப்போது பேசி அன்றைய விவாதப்பொருளாக மாறிவிடுவர்.
நடிகர் விஜய்யின் பேச்சுக்களும் அரசியலை ஒற்றியே இருப்பது சமீபகாலமாக அவர் அரசியலுக்கு ஆயத்தமாகிறாரா என்ற கேள்வியையே எழுப்பியிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டின் எதிர்காலம், கடந்த காலங்களில் திரைத்துறையில் இருந்தே உருவானதுபோல் இனியும் தொடரலாம் என்பதையே அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோரை அரசியல் வலை சூழ்ந்திருந்தாலும் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக, தான் உண்டு தனது வேலை உண்டு என எந்த விவகாரத்திலும் தலையிடாமல் தனி வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.