தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எங்கள் உழைப்பை உலக அளவில் பார்வையாளர்கள் கண்டுகளிக்க இருப்பது மகிழ்ச்சி' - சூர்யா - நடிகர் சூர்யா

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதி இந்தியாவிலும், 200 வெளிநாடுகளிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது.

Suriya on Soorarai Pottru
சூரரைப் போற்று படத்தில் சூர்யா

By

Published : Aug 22, 2020, 11:43 PM IST

சென்னை: 'சூரரைப்போற்று' படத்துக்காக நாங்கள் வெளிப்படுத்திய உழைப்பு உலக பார்வையாளர்களை மகிழ்விக்க போவது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

ஏர் டெக்கான் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட படமாக சூரரைப் போற்று தயாராகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (ஆகஸ்ட் 22) இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து நடிகர் சூர்யா கூறியதாவது:

இந்தக் கதையை நான் கேட்ட தருணத்தில், அதை உலகத்துக்கு சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். படத்தை 2டி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரிக்கவும் விரும்பினேன். கேப்டன் கோபிநாத்தின் கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்தாலும், இறுதி பணிகள் முடிந்து பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் 'சூரரைப் போற்று' படத்தை பார்க்க முடியும் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்துக்காக நாங்கள் வெளிப்படுத்திய உழைப்பு, உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது என்பது சந்தோஷமாக உணர்வை ஏற்படுத்துகிறது என்றார்.

இயக்குநர் சுதா கொங்கரா கூறியதாவது:

சூர்யாவை இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்துக்கு அவர்தான் எனது முதல் மற்றும் கடைசி தேர்வாக இருந்தார். அமேசான் ப்ரைம் வீடியோவில் படத்தை பிரீமியர் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். அதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உலகெங்கிலும், பல்வேறு வகையான மக்கள் இந்தப் படத்தை பார்க்கப் போகிறார்கள் என்பது ஒரு படைப்பாளருக்கு உற்சாகமான விஷயம்தான்.

அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய இயக்குநர் விஜய் சுப்பிரமணியம் கூறியதாவது:

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொன்மகள் வந்தாள் திரைப்படத்துக்கு எங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா நடித்த சூரரைப் போற்றுவின் உலகளாவிய பிரீமியர் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதி இந்தியாவிலும், தவிர 200 வெளிநாடுகளிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது. படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின், “சூரரைப் போற்று” ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details