இயக்குநர் செல்வராகவன்- சூர்யா கூட்டணியில் என்ஜிகே திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுடன் 'காப்பான்' எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஆர்யாவும் நடித்து வருகிறார்.
அஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா..! - சூர்யா-சிவா
மேலும், இறுதிச்சுற்று எனும் நல்ல கதையம்சம் கொண்ட படத்தை கொடுத்து கவனம் ஈர்த்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று எனும் படத்தில் நடிக்கிறார். அப்படத்தினை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் முதல் முறையாக சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இப்படத்தை தொடர்ந்து, சூர்யா அடுத்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ந்து இயக்கிய சிறுத்தை சிவா, முதல் முறையாக சூர்யாவை இயக்க உள்ளார். வழக்கமான சிறுத்தை சிவா ஸ்டைலில் பக்கா கமர்சியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை சூர்யாவின் உறவினர் ஞானவேல், தனது ஸ்டுடியோ கீரின் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஞானவேல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.