சென்னை: ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜிப்ஸி' படத்தின் ரிலீஸ் டீஸர் நடிகர் சூர்யா வெளியிட்டார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து படத்தின் புதிய டீஸரை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
'துப்பாக்கியால் ஒரு குரலை அடக்க நினைத்தால் அது ஓராயிரமாக வெடிக்கும்', 'இந்தியாதான் எங்க ஆளுங்க, இதுதான் எங்க நாடு' என்று இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் தோன்றும் ஹீரோயின் கூறுவது என தற்கால அரசியல் நிகழ்வுகளை குறிப்பிடும் விதமான வசனங்களோடு ஜிப்ஸி டீஸர் காட்சிகள் அமைந்துள்ளன.
குக்கூ, ஜோக்கர் படப்புகழ் ராஜூ முருகன் இயக்கியிருக்கும் இந்தப் படம் காதல் கலந்த பயணப் படமாக 'ஜிப்ஸி' உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ளார். நடாஷா சிங், மலையாள நடிகர் சன்னி வெய்ன், லால் ஜோஸ், பிரிட்டிஷ் இந்தியா இசைக்கலைஞர் சுசீலா ராமன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தில் கிட்டாரிஸ்ட்டாக தோன்றும் ஜீவா, நாடோடி வாழ்க்கை வாழ்ந்துவரும் கேரக்டரில் நடித்திருப்பதுடன், அவர் செல்லும் பயணங்களின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் நீளமான தலைமுடியுடன் அவர் தோன்றுகிறார். தனது கேரக்டருக்காக குதிரை ஏற்றம் என பல பயிற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் பணிகள் கடந்த ஆண்டே முடிந்த நிலையில், மத்திய அரசை விமர்சனம் செய்யும் சில காட்சிகள் இருந்ததால் சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரைக் கேலி செய்வது போன்றும், இந்து மத உணர்வை விமர்சிக்கும் விதமாகவும் காட்சிகள் இருந்ததுதான் காரணம் எனத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து படத்தின் கருத்து மாறாத வண்ணம் காட்சிகளை மாற்றுவது குறித்து ஆலோசித்த படக்குழு, மறு தணிக்கைக்கு படக்குழுவினர் விண்ணப்பித்தனர்.
படத்துக்கு ஒரு வழியாக ஏ சான்றிதழ் கிடைத்த நிலையில் ரிலீஸ் செய்தவதில் சிக்கல் எழுந்தது. தற்போது அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில் படத்தை மார்ச் 6ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இதைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதையொட்டி படத்தின் டீஸர் என்று கூறி புதிய டீஸரை வெளியிட்டுள்ளனர்.