பாலிவுட்டில், மேரி கோம், தோனி, சாய்னா நேவால் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படங்கள் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்களும் இதுபோன்ற படங்களை ரசித்து பார்க்கின்றனர். இதனால் பல இயக்குநர்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் 'மிஸ்டர் ஐபிஎல்' சுரேஷ் ரெய்னா நேற்று சமூகவலைதளத்தில் கலந்துரையாடினார். இதை சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பாவனா தொகுத்து வழங்கினார். அப்போது பாவனா, ரெய்னாவிடம் உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் யார் நடிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என கேள்வியெழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "சென்னைக்கும் எனக்குமான தொடர்பு அனைவருக்கும் தெரியும். சென்னை எனக்கு இரண்டாவது ஹோம் டவுன் போன்றது. மிகவும் நேசிக்கிறேன். எனது பயோபிக் எடுத்தால் அதில் நிச்சயம் தென்னிந்திய நடிகர்கள் ரெய்னா கதாபாத்திரத்தை ஏற்கவேண்டும். அதிலும் குறிப்பாக சூர்யா நடித்தால் சிறப்பாக இருக்கும். அவரால் என்னுடைய கதாபாத்திரத்தை சரியாக செய்ய முடியும். அதே போன்று துல்கர் சல்மானும் நடித்தால் நன்றாக இருக்கும்" என்று உற்சாகத்துடன் பதிலளித்தார்.
சுரேஷ் ரெய்னா 'Believe: What Life and Cricket Taught Me' என்னும் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி முடித்தார். அந்தப் புத்தகத்தில், சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் பயணம் குறித்த தகவல்களும், தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் சமீபத்தில் வெளியானது.
இதையும் படிங்க: ‘விளையாட்டு குறித்த உரையாடல் சிறப்பாக அமைந்தது’ - சுரேஷ் ரெய்னா!