'கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கியிருக்கும் புதிய படம் 'ஜெய் பீம்'. இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். இதில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷான் ரால்டன் இசையமைக்கிறார்.
இப்படம் 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சூர்யா ஏற்றிருக்கும் வழக்கறிஞர் வேடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சந்துருவின் கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது.
நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது நடந்த ஒரு வழக்கில் பழங்குடி பெண்ணிற்கு நீதிபெற்றுத் தந்ததை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'ஜெய் பீம்' திரைப்படம் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. 'ஜெய் பீம்' படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
தணிக்கைக்குழுச் சான்றிதழ் விவரம் இந்நிலையில், 'ஜெய் பீம்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் நீளம் 2.44 மணிநேரம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக 'ஜெய் பீம்' நவம்பர் 2ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நகர்ப்புற நக்சல் ஆகிறாரா சூர்யா?