தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர் இல்லாமல் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்! சூர்யா ஆவேசம்

By

Published : Jul 14, 2019, 11:39 AM IST

சென்னை: 'புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இதனால் பயிற்சி மையங்கள் வர்த்தக மையங்களாக காளான்கள் போல் உருவெடுக்கும்' என நடிகர் சூர்யா ஆவேசத்துடன் தெரிவித்தார்.

சூர்யா

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதில் முன் நிறுத்தப்பட்ட மும்மொழிக்கொள்கைக்கு எதிராக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு கருத்து தெரிவிக்க ஜூலை 31ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் நீட்டித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவக்குமாரின் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேசன் சார்பில் சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூர்யா, சிவக்குமார், கார்த்தி - கல்வியாளர்கள் வசந்தி தேவி, பேராசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய நடிகர் சூர்யா, "30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கான இந்தப் புதிய கல்விக்கொள்கை குறித்து பலதரப்பட்ட கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் கேள்வி எழுப்பாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

ஒரு தலைமுறை மாணவர்களின் கல்வி தொடர்பான கொள்கையை வெளியிட்டு ஒரே மாதத்தில் கருத்து கேட்டு உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசரம் ஏன்? இதுபற்றி கேள்வி கேட்காமல் இருந்தால், புதிய கல்விக்கொள்கை வரைவு நம் மீது திணிக்கப்படும். இதனால், பழங்குடியினர், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

மூன்று வயதிலேயே மும்மொழிகளை திணிப்பது மிகவும் ஆபத்தானது. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பை கண்கூடே பார்த்துவருகிறோம். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமலே படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் தேர்வை சந்திக்க முடியும்.

பள்ளிப்பருவத்தில் எழுதப்படும் தேர்வுகள் தகுதி இல்லையென உயர் கல்விக்கு தேசிய அளவில் பொதுவான நுழைவுத்தேர்வு கொண்டு வருவது நல்ல முறையா? இதுவா புதிய கல்விக்கொள்கை.

நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த முறை தொடர்ந்தால் பயிற்சி மையங்கள் வர்த்தக மையங்களாக காளான்கள் போல் உருவெடுக்கும். புதிய கல்விக்கொள்கையில் நன்மைகள் இருந்தாலும், அச்சம் நிறைந்த அம்சங்கள் பல இருக்கிறது" என கோபத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details