சென்னை: நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு முன்னரே சில ஆன்லைன் தளங்களில் லீக்கானது.
தீபாவளி ஸ்பெஷலாக சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று (நவ. 11) காலை முதலே படம் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது ஆவலை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.
இதுபோன்ற எதிர்பார்ப்பு மிக்க படங்களை ரிலீஸ் நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னரே வெளியிடுவதை பல ஓடிடி தளங்கள் வழக்கமாக கடைப்பிடித்து வந்தன. அந்த வகையில் 'சூரரைப் போற்று' படமும் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு முன்பாக வெளிவந்துவிடும் என ரசிகர்கள் காத்திருக்கையில் சுமார் 8 மணியிலிருந்து பல்வேறு ஆன்லைன் தளங்களில் இப்படம் வெளியாகியது.
நேரம் மாற்றம் காரணமாக இந்தியாவுக்கு முன்னரே, பல்வேறு வெளிநாடுகளில் படம் ரிலீசான நிலையில், உடனடியாக லீக்கும் செய்யப்பட்டது. இதன் பின்னர் அமேசான் ப்ரைமில் படம் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
'சூரரைப் போற்று' படத்தை வீட்டில் இருந்தபடியே பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருப்பதாகவும், திரையரங்குகளில் பார்க்க முடியாமல் மிஸ் செய்துவிட்டோமே என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அத்துடன் இயக்குநர்கள் கே.வி. ஆனந்த், பாண்டிராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா, 'மாறா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.